07.074 திருவேள்விக்குடி | மின்னுமா மேகங்கள் பொழிந்து | சுந்தரர் தேவாரம் |

Музыка

07.074 திருவேள்விக்குடி | மின்னுமா மேகங்கள் பொழிந்து இழிந்த அருவி | சுந்தரர் தேவாரம்
"தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்."
பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர், ஸ்ரீ மணவாளேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி
திருமுறை : ஏழாம் திருமுறை 074 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பதிக குரலிசை : திரு மயிலை சற்குருநாத ஓதுவார்
அரசகுமாரன் ஒருவனுக்கு நிச்சயித்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்குமுன் இறந்துவிட, உறவினர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டனர். அரசகுமாரன் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய, அவர் பூதகணத்தை அனுப்பி பெண்ணை அழைத்து வரச்செய்து திருமண வேள்வியைச் செய்த தலம் என்று தலவரலாறு கூறுகிறது
சுவாமிகள் திருவாவடுதுறையை வணங்கித் திருத்துருத்தியை அடைந்து "அடியேன் உற்றபிணி வருத்தம் எனை ஒழித்தருள வேண்டும்" என்று வணங்குவாராய்ப் பணிய "இப்பிணி நீங்க இவ்வட குளத்துக்குளி" என்று பெருமான் கூற, அங்ஙனமே அத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து பிணி நீங்கி ஒளிசேர் திருமேனியராகி மிக்க பேரன்பினால் திருக்கோயிலை அடைந்து பாடியருளியது இத்திருப்பதிகம். இத்திருப்பதிகம் தம் உடம்பிற் பிணியைப் போக்கி அருளிய இறைவரது திருவருளின் மிகுதியை நினைந்து களித்து அருளிச்செய்தது.
மின்னுமா மேகங்கள் பொழிந்து இழிந்த அருவி
வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும்
அன்னமாம் காவிரி அகன் கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்குமாறு எம்பெருமானை
என்னுடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை. ..... (01)
கூடுமாறு உள்ளன கூடியும் கோத்தும்
கொய்புன ஏனலோடு ஐவனம் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமாறு உந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
பாடுமாறு அறிகிலேன் எம்பெருமானை
பழவினை உள்ளன பற்று அறுத்தானை. ..... (02)
கொல்லு மால் யானையின் கொம்பொடு வம்பார்
கொழுங்கனிச் செழும்பயன் கொண்டு கூட்டு எய்தி
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும்
போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
சொல்லுமாறு அறிகிலேன் எம்பெருமானைத்
தொடர்ந்தடும் கடும் பிணித் தொடர்வு அறுத்தானை. ..... (03)
பொரியுமா சந்தனத் துண்டமோடு அகிலும்
பொழிந்து இழிந்து அருவிகள் புன்பலம் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
அறியுமாறு அறிகிலேன் எம்பெருமானை
அருவினை உள்ளன ஆசு அறுத்தானை. ..... (04)
பொழிந்து இழி மும்மதக் களிற்றின மருப்பும்
பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி
எண் திசையோர்களும் ஆட வந்து இங்கே
சுழிந்து இழி காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமாறு எம்பெருமானை
உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை. ..... (05)
புகழுமா சந்தனத் துண்டமோடு அகிலும்
பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம் படப் பெருகி
ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
இகழுமாறு அறிகிலேன் எம்பெருமானை
இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை. ..... (06)
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும்
வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும்
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
உரையுமாறு அறிகிலேன் எம்பெருமானை
உலகறி பழவினை அற ஒழித்தானை. ..... (07)
ஊருமா தேசமே மனம் உகந்து உள்ளி
புள்ளினம் பல படிந்து ஒண்கரை உகள
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
கவரிமா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஆருமாறு அறிகிலேன் எம்பெருமானை
அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை. ..... (08)
புலங்களை வளம்படப் போக்கறப் பெருகி
பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப
இலங்குமார் முத்தினோடு இனமணி இடறி
இருகரைப் பெருமரம் பீழ்ந்து கொண்டு எற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளை செடியனேன் நாயேன்
விலங்குமாறு அறிகிலேன் எம்பெருமானை
மேலை நோய் இம்மையே வீடு வித்தானை. ..... (09)
மங்கையோர் கூறு உகந்து ஏறு உகந்து ஏறி
மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி அன்றி மற்று அறியான்
அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தம் கையால் தொழுது தம் நாவின்மேற் கொள்வார்
தவநெறி சென்று அமருலகம் ஆள்பவரே. ..... (10)
ஆலய முகவரி : அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோவில், திருவேள்விக்குடி, குத்தாலம் அஞ்சல், குத்தாலம், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN - 609 801.
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"

Пікірлер: 4

  • @indhumuthu9156
    @indhumuthu91563 жыл бұрын

    Good song

  • @tribunalswish3925
    @tribunalswish39252 жыл бұрын

    நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran29892 жыл бұрын

    ஓம் நமசிவாய🙏

  • @tribunalswish3925
    @tribunalswish39252 жыл бұрын

    எஇன்று என் பேத்தி க்குஅனறுவைசிகிச்சையால்நோய்நீங்கிநல்லாகவேண்டும்🙏

Келесі